நோயாளர்களை அனுமதிக்க மறுக்கும் வைத்தியசாலைகள்

ஒக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி திண்டாடும் இந்திய வைத்தியசாலைகள்

by Bella Dalima 24-04-2021 | 7:04 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 இலட்சத்தைக் கடந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக தஞ்சமடைந்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை அங்கு உருவாகியுள்ளது. மூச்சுத்திணறலால் சிரமப்படும் நோயாளர்களுக்கு சீராக சுவாசிக்கும் வசதியை ஏற்படுத்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் திண்டாடுகின்றன. இதனால் புதிதாக நோயாளர்களை அனுமதிப்பதையும் டெல்லி உள்ளிட்ட வட மாநில வைத்தியசாலைகள் தவிர்த்து வருகின்றன. அத்துடன், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் சிகிச்சை எனும் கொள்கையை வட மாநில வைத்தியசாலைகள் ஆரம்பித்துள்ளன. ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லியில் மேலும் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலைகளுக்கு வெளியே நோயாளர்கள் காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. டெல்லியில் பல மயானங்களில் 24 மணித்தியாலங்களாக தொடர்ந்து சடலங்கள் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலங்களை தகனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பலர் காத்திருப்பதுடன், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. ஒக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கறுப்பு சந்தை வியாபாரம் இடம்பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே, ஒக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை, அங்கு அம்பியுலன்ஸ் வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட சடலம் வீதியில் வீழ்ந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.