24 மணித்தியாலங்களில் 192 கொரோனா தொற்றாளர்கள் கொழும்பில் பதிவு

by Staff Writer 23-04-2021 | 7:38 PM
Colombo (News 1st) இன்று (23) காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்த 24 மணித்தியாலங்களில் அதிக எண்ணிக்கையிலான COVID நோயாளர்கள் (192) கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் புதிதாக 117 COVID தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதுடன், குருணாகல் மாவட்டத்தில் 99 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் சில இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டு விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த பொலிஸ் பிரிவில் 500-க்கு மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருணாகல் கனேவத்த பிரதேசத்தின் தித்தவெல கிராம சேவகர் பிரிவில் 150 பேருக்கு மேல் அடையாளம் காணப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டி சுகாதார உத்தியோகத்தர் பிரிவில் இன்று முற்பகல் வரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 108 ஆக இருந்தது. கொஸ்வத்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பொலிஸ் நிலையத்தின் சகல அதிகாரிகளும் சுயதனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் அதனை அண்மித்துள்ள ஶ்ரீ விஜேசுந்தரராம விகாரையிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன.