20 கிலோ கொழுந்து பறிக்குமாறு வற்புறுத்தல்; தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

20 கிலோ கொழுந்து பறிக்குமாறு வற்புறுத்தல்; தோட்டத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2021 | 8:09 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மஸ்கெலிய – பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நாளாந்தம் 20 கிலோ வரை தேயிலை பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துவதாகத் தெரிவித்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

நாளாந்தம் பறிக்கும் கொழுந்தின் தொகையை அதிகரிக்குமாறு வற்புறுத்தும் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை கெம்பியன் மேல் பிரிவு, கெம்பியன் கீழ் பிரிவு, நெல்லம்ப, ஆல்டி மேல் பிரிவு, ஆல்டி கீழ் பிரிவு மக்களே பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை தற்போது நாளாந்தம் 1000 ரூபா சம்பளம் வழங்கும் நிலையில், கட்டாயம் ஆகக் குறைந்தது 20 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுறை சுட்டிக்காட்டியிருந்தார்.

அவ்வாறு தேயிலை பறித்தாலே செலவுகளை ஈடு செய்துகொள்ள முடியும் எனவும் அவர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராகலை – மாகுட்கலை கிளண்டவன் தோட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டம் உரிய முறையில் பராமரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் முதல் கிளண்டவன் தோட்ட மக்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், தமக்கான தீர்வு இன்னும் கிட்டாததால் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வலப்பனை பிரதேச சபையின் சில உறுப்பினர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்