வார இறுதி நாட்களில் பயணத் தடை விதிக்கப்பட மாட்டாது: சவேந்திர சில்வா

by Bella Dalima 23-04-2021 | 3:34 PM
Colombo (News 1st) வார இறுதி நாட்களில் பயணத் தடை விதிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார். எனினும், மக்கள் ஒன்றாகக் கூடுவதை தவிர்த்து கொரோனா பரவலைத் தடுக்க உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது நடைபெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதனிடையே, ஏதேனும் பகுதியில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்தால் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் சில தினங்களில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார். குளியாப்பிட்டிய, கனேவத்த, வத்தளை, திவுலபிட்டிய ஆகிய பகுதிகளிலேயே தற்போது அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதேவேளை, காற்றினூடாக COVID -19 வைரஸ் பரவக்கூடும் என்பதால், எந்நேரமும் முகக்கவசத்தை அணியுமாறு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பேராசிரியர் நிலிகா மலவிகே கேட்டுக்கொண்டார். புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரஸை விட தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் மிக வீரியமாகவும் சடுதியாக பரவக்கூடியதாக உள்ளதெனவும் பேராசிரியர் நிலிகா மலவிகே கூறினார். முன்னர் ஒரு நோயாளரால் மற்றுமொருவருக்கு மாத்திரமே வைரஸ் பரவியதாகவும், தற்போது ஒருவரிடமிருந்து பலருக்கு தொற்று பரவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்