இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம்

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம்: ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் டெல்லி வைத்தியசாலையில் 25 பேர் உயிரிழப்பு

by Bella Dalima 23-04-2021 | 7:52 PM
Colombo (News 1st) இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. ஒக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லி கங்காராம் வைத்தியசாலையில் 25 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால், சிகிச்சை அளிக்க முடியாது எனும் அறிவித்தல் சில வைத்தியசாலைகளின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. கண்முன்னே உயிரிழப்பதைப் பார்த்து உறவினர்கள் கதறியழும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. டெல்லியில் மாத்திரம் 24 மணித்தியாலங்களில் 306 கொரோனா மரணங்கள் உறுதியாகியுள்ளன. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஒவ்வொரு இடங்களிலும் எரிக்கப்படும் காட்சிகள் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இதனிடையே மகராஷ்டிரா மாநிலத்திலுள்ள வைத்தியாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 14 நோயாளர்கள் உயிரழந்தனர். தீ விபத்து சம்பவம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் வைத்தியசாலையில் 90 பேர் வரை சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது கொரோனா அலையின் போது தமிழக்கத்தில் 10 இலட்சம் நோயாளார்கள் பதிவாக ஓர் ஆண்டு கடந்த போதிலும் இரண்டாவது அலையில் 2 மாதங்களில் 10 இலட்சம் பேர் பதிவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.