கொழும்பு துறைமுக நகர்  சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு 

கொழும்பு துறைமுக நகர்  சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு 

கொழும்பு துறைமுக நகர்  சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு 

எழுத்தாளர் Staff Writer

23 Apr, 2021 | 6:25 pm

Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயத்திற்கான சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீது 05 நாட்களாக உயர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட பரிசீலனை இன்று நிறைவு பெற்றுள்ளது.

இந்த மனுக்கள் தொடர்பான பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தீர்மானம் விரைவில் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது.

மனுக்கள் மீதான மேலதிக எழுத்து மூல சமர்ப்பணங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னர் உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் குழாம் அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனோ அல்லது மக்கள் அபிப்பிராயத்தினூடாகவோ நிறைவேற்றும் அவசியம் இல்லை எனவும், பாராளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றுவது போதுமானது எனவும் உத்தரவிடுமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்ஸானா ஜமீர் கோரிக்கை விடுத்தார்.

இந்த சட்டமூலத்தில் அரசியலமைப்பிற்கு முரணாக எவ்வித சரத்துக்களும் உள்ளடக்கப்படவில்லை எனவும், தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடன் அரசாங்கத்தினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்