நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு; சுற்றுலா பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை

by Bella Dalima 22-04-2021 | 4:07 PM
Colombo (News 1st) எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் எச்சரிக்கை மிக்க காலம் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டார். அத்துடன், பண்டிகை நிகழ்வுகளை உடனடியாக நிறுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்தார். இதேவேளை, நாட்டில் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று (21) மாத்திரம் 516 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இந்த எண்ணிக்கைக்கு அமைய, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 98,050 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 93,668 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 3,752 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நேற்று 5 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. செவனகல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவரும், ஜா-எல பகுதியை சேர்ந்த 80 வயதான ஆணொருவரும் களனியை சேர்ந்த 57 வயதான ஆணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆணொருவரும் கம்பஹாவை சேர்ந்த 39 வயதான ஆணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 171 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தவிர புத்தளம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கம்பஹா மாவட்டத்தில் 43 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.