ஹம்பாந்தோட்டையில் தரித்துள்ள கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவிப்பு

by Staff Writer 21-04-2021 | 3:43 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் H.L.அனில் ரஞ்சித் தெரிவித்தார். இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் என அவர் கூறினார். அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது, குறித்த இரசாயன பொருள் என்ன, அது எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என H.L.அனில் ரஞ்சித் சுட்டிக்காட்டினார். எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வௌியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், குறித்த கப்பல் துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். நெதர்லாந்தின் Rotterdam-இல் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் குறித்த கப்பலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக , கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் Rotterdam-இலிருந்து சீனாவின் ஷாங்காய் துறைமுகம் நோக்கி பயணித்த BBC Naples எனும் பெயருடைய இந்தக் கப்பல் நேற்றிரவு 9 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்தது. இயந்திரக் கோளாறை திருத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ளது. கப்பலில் அணு உலைகளுக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருந்துள்ளதுடன், அது தொடர்பாக கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி உரிய தகவல்களை பதிவு செய்யவில்லை என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்தது. குறித்த சரக்குக் கப்பலில் Uranium Hexafluoride கதிர்வீச்சு திரவம் இருந்ததாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் இன்று பிற்பகல் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியது. தேசிய பிரதிநிதி குறித்த நச்சு இரசாயனத் தொகை குறித்து முன்கூட்டியே இலங்கை துறைமுக அதிகார சபைக்கோ அல்லது ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக அதிகார சபைக்கு அறிவிக்கவில்லை அவர்கள் கூறினார்கள். இலங்கை துறைமுக அதிகார சபையும் இலங்கை கடற்படையும் இணைந்து மேற்கொண்ட சோதனைகளின் போதே Uranium Hexafluoride கதிரியக்கப் பொருள் கப்பலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம் தெரிவித்தது. அதற்கமைய, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து உடனடியாக கப்பலை அப்புறுப்படுத்திக்கொள்ளுமாறு அறிவித்ததாகவும் கப்பலின் உள்நாட்டு பிரிதிநிதி சமர்ப்பித்த தகவல்கள் பிரகாரம், இலங்கை துறைமுக அதிகார சபை, கடற்படை மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள் கப்பலின் சீர்திருத்த பணிகளுக்கு தேவையான அத்தியாவசிய ஆவணங்களுக்கு அனுமதி அளித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் இருந்து கடற்படையும், இலங்கை சுங்கமும் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் கப்பலில் இருந்து எந்தவொரு பொருளும் இறக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக சூரிய சக்தி காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி செயற்றிட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சட்டத்தை மீறிய காரணத்திற்காக குறித்த கப்பலின் உள்நாட்டு பிரதிநிதியான Wilhelmsen Meridian Navigation Ltd நிறுவனத்திற்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்