துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் பரிசீலனை

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் பரிசீலனை

by Staff Writer 21-04-2021 | 9:00 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்றும் உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இன்றைய தினம் இடைநிலை மனுதாரராக தொடர்புபட்ட ஜனாதிபதியின் செயலாளர் P. B.ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கருத்துத் தெரிவித்தார். சீனா இலங்கையின் நீண்ட கால நண்பர் என்பதனால், கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலயத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளை சீன பிரஜைகளிடம் வழங்குவது தொடர்பில் நம்பிக்கையின்மையுடன் சிந்திக்கக்கூடாது என குறிப்பிட்டார். இந்த திட்டம் இலங்கையர்கள் மகிழ்ச்சியடையக் கூடிய விடயம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். சீன அரசாங்கம் நிர்மாணித்துக் கொடுத்த உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் இருந்து கொண்டே சில சட்டத்தரணிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலையம் சீனாவின் காலனித்துவ பிரதேசமாக மாறும் என கூறுவது நகைப்புக்குரியது எனவும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார். அந்த ஆணைக்குழுவிற்கான அனைத்து உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிப்பதால், அது எந்த வகையிலும் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாக அமையாது எனவும் அவர் வலியுறுத்தினார். மனுதாரர்கள் சுட்டிக்காட்டுவதைப் போன்று, சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பிற்கு முரணாக அமைந்துள்ளமை தௌிவாவதால், அவற்றை திருத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என நீதியரசர் பிரியந்த ஜயவர்தன வினவியபோது, தாமும் அதனை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பதிலளித்துள்ளார்.