ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தி; நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி

by Bella Dalima 21-04-2021 | 8:00 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கை வரலாற்றில் மற்றுமொரு கறுப்பு தினமானது. தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.45-க்கு நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிட மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் பிரதான திருப்பலி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. சர்வ மதத் தலைவர்களுடன், தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பிரதான ஆராதனையில் கலந்துகொண்டனர். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர். நீதியை நிலைநாட்டுமாறு வலியறுத்தி பேரணி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு வலியறுத்தி இன்று பிற்பகல் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா வித்தியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்த பேரணி கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தை சென்றடைந்தது. புனித செபஸ்தியார் தேவாலாயம் வரை இவர்கள் பேரணியாக சென்றனர். பின்னர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாலாயம் போராயரினால் திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயத்திலும் இன்று காலை ஆராதனைகள் நடைபெற்றன. தேவாலயத்தின் பிரதான போதகர் மகேசன் ரொஷான் தலைமையில் இந்த ஆராதனை நடைபெற்றது. சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகே நிர்மாணிக்கப்பட்ட நினைவுத் தூபி இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நானூஓயா நாவலர் வித்தியாலயத்திலும் நினைவுகூரப்பட்டனர். பதுளை புனித மரியாள் தேவாலயத்திலும் தெனியாய புனித மத்தேயு இருபாஷா பாடசாலையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாத்தளை புனித தோமஸ் தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இன்று நடைபெற்றன இதேவேளை, நுவரேலியா கார்லபேக் வித்தியாலயத்திலும் இன்று நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து வவுனியா இரம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்திலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம இளைப்பாறல் வேண்டி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன. மன்னார் தோட்டவௌி தேவ சாட்சிகள் இராக்கினி ஆலயத்தில் உயிரிழந்தவர்களுக்காக கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மரியன்னை பேராலயத்தில் இன்று காலை அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று யாழ். பல்கலைக்கழகத்திலும் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, திருகோணமலை புனித மரியாள் தேவாலயத்தில் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. குருநாகல் - ஹொரேம்பேவ ஜூம்மா பள்ளிவாசலிலும் விசேட துஆ பிரார்தனை இடம்பெற்றது.