உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து பிரதமர் விசேட உரை

by Bella Dalima 21-04-2021 | 8:19 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றினார். ஆணைக்குழு ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கையை தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக இதன்போது பிரதமர் தெரிவித்தார். நீதிமன்ற செயற்பாடுகளில் தலையீடு செய்ய தாம் எதிர்பார்க்காத போதிலும், சட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் கூறினார். ஆணைக்குழுவிற்கு மேலதிகமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கத் தேவையான வசதிகளை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். கடந்த அரசாங்க காலத்தில் தேசிய பாதுகாப்பை அரசியலுடன் தொடர்புபடுத்திக் கொண்டதால் அப்பாவி மக்களே பாதிப்பை சந்திக்க நேரிட்டதாகவும் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பல்வேறு பொய்களை சமூகத்தில் பரப்பி, விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்வதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். பிரதமரின் இந்த உரையை அடுத்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு ஆடையணிந்து சபைக்கு சமூகமளித்திருந்ததுடன், ஆளும் கட்சி உறுப்பினர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்தனர். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (20) வௌியிட்ட கருத்திற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று எதிர்ப்புத் தெரிவித்தமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.