300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்

by Staff Writer 21-04-2021 | 3:57 PM
Colombo (News 1st) இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்தப்பட்ட சுமார் 300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற சரக்குக் கப்பலில் கொக்கைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இந்தியாவின் மத்திய வருவாய் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தை சென்றடைந்த கப்பலை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது, கொள்கலனுக்குள் மரக்குற்றிகளுக்கு நடுவில் 9 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 1500 கோடி இந்திய ரூபாவாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கப்பலில் தூத்துக்குடிக்கு சென்ற சிலரை அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.