கொழும்பு துறைமுக நகர் தொடர்பான ஆணைக்குழு ஜனாதிபதியின் தரகராக செயற்படும்: விஜயதாச எச்சரிக்கை

by Staff Writer 20-04-2021 | 7:42 PM
Colombo (News 1st) விடுதலைப்புலிகள் இயக்கம் 30 வருடங்களாக யுத்தம் நடத்தியும் நாட்டின் ஒரு அங்குல இடத்தைக் கூட கைப்பற்றாத போது, தற்போதைய அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினூடாக தனியான இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார். மொண்டிவீடியோ பிரகடனத்திற்கு அமைய, தனி நாடாக அறிவிப்பதற்குத் தேவையான அனைத்து சாதகமான விடயங்களும் குறித்த சட்டமூலத்தினூடாக கொழும்பு துறைமுக நகருக்கு வழங்கப்படவுள்ளதாக விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார். கொழும்பு துறைமுக நகர் பொருளாதார வலய ஆணைக்குழுவிற்கான சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினார். சட்டமூலத்தினூடாக ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரின் காணியை விற்பனை செய்யவும் குத்தகைக்கு விடவும் ஜனாதிபதியின் ஏலத் தரகராக செயற்படும் என சட்டத்தரணி தெரிவித்தார். சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்ட கட்டமைப்பை சீர்குலைப்பதாகவும் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார். சுங்க கட்டளைச் சட்டம் கொழும்பு துறைமுக நகருக்கு பொருத்தமில்லை என்றால், நைட்ரஜன் துப்பாக்கிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுக்க முடியாமல் போகும் எனவும் அவர் எடுத்துக்கூறினார். இந்த செயற்பாடு தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். துறைமுக நகர் வலையத்திற்குள் உள்நாட்டு நிர்வாகம் இல்லாமையால், அங்கு வாழக்கூடியவர்களுக்கு வாக்குரிமை இல்லாது போகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ரஜீவ அமரசூரியவின் மனு சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தெரிவித்தார். இதனூடாக அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது சரத்துக்கள் மீறப்படுகின்றமையால், அது அரசியலமைப்பை மீறும் செயல் என அவர் கூறினார். குறித்த ஆணைக்குழுவினூடாக அறவிடப்படும் வரி மற்றும் கட்டணங்கள், நாட்டின் ஒன்றிணைந்த நிதியத்தில் வைப்பிலிடப்படாது ஆணைக்குழுவின் நிதியத்திலேயே வைப்பிலிடப்படும் எனவும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதனுடன் தொடர்புடையவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளாமையும் ஒரு குறைபாடு என அவர் கூறினார். துறைமுக நகரின் நிர்வாகத்திற்காக நியமிக்கப்படும் ஆணைக்குழுவில் அனைவரும் வௌிநாட்டவர்களாக காணப்படுவதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி இக்ரம் மொஹமட் தெரிவித்தார். இந்த நிலைமையில் வௌிநாட்டவர்கள், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எவ்வாறு உறுதியாகக் கூறுவது என சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.