இலங்கையை முதலீட்டிற்கான இடமாகக் கருதுங்கள்: Boao மாநாட்டில் ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 20-04-2021 | 8:16 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக Boao மாநாட்டில் இன்று உரையாற்றினார். இலாப நோக்கற்ற ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் தலைமையகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ளது. பலன்மிக்க மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் சாதகமான விவாதத்தை கட்டியெழுப்புவதற்காக உலகத் தலைவர்களும் உலக வர்த்தகர்களும் ஒரே மேடையில் சந்திக்கும் நிகழ்வாக Boao மாநாடு விளங்குகின்றது. இந்த சர்வதேச மாநாட்டில் ஆசியா மற்றும் ஏனைய கண்டங்களின் அரச தலைவர்களும் வர்த்தகர்களும் அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார். இலங்கை சகல நட்பு நாடுகளுடன் குறிப்பாக ஆசிய வலயத்திலுள்ள அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் தெளிவானதும், புதிய தெம்புடனும் கூடிய சர்வதேச கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார். வலயத்தின் நீண்டகால அபிவிருத்தி அபிலாசைகளை முன்னெடுப்பதை இலக்காகக்கொண்ட பட்டுப்பாதை பிரவேசத்தை வலய நாடுகள் மற்றும் அரச சார்பற்ற செயற்பாட்டளர்களுடன் இணைந்து முன்னெடுக்கக் கூடியதாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தமது எதிர்பார்ப்பு கடன் பெறுவதல்ல எனவும் முதலீட்டை ஊக்குவிப்பதே எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சாதகமான வரி விதிப்புகள், வேறு ஊக்குவிப்புகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கவர்ந்திழுக்கும் கொள்கைகளை தயாரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையின் போது தெரிவித்தார். இலங்கையை முதலீட்டிற்கான இடமாகக் கருதுமாறு அங்கத்துவ நாடுகளிடம் ஜனாதிபதி கோரிக்கை முன்வைத்தார்.