தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2021 | 3:21 pm

Colombo (News 1st) இலங்கை அரசு தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்வதாக முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் மு.தம்பிதுரை, மாநிலங்களவை விவாதத்தின் போது விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது அ.தி.மு.க உறுப்பினர் மு. தம்பிதுரை, ஈழத்தமிழர்களின் அதிகாரப் பகிர்வை உறுதி செய்து தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்தியா முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், கலாநிதி ஜெய்சங்கர் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்கு அனுப்பிய கடிதத்தில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பை, இந்தியா புறக்கணித்தாலும் தனது நிலைப்பாட்டை எழுத்து மூலம் இந்திய அரசு விளக்கி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான அதிகாரப் ப​கிர்வை உறுதி செய்வதாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாண சபைகள் முழு சுதந்திரத்துடன் செயற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா கோரியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்