ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

நவால்னி சிறையில் இறந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - அமெரிக்கா எச்சரிக்கை

by Staff Writer 19-04-2021 | 2:52 PM
Colombo (News 1st) ரஷ்ய எதிர்கட்சித் தலைவரும் புட்டின் விமர்சகருமான அலெக்சி நவால்னி சிறையில் உயிரிழந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்கா, ரஷ்யாவை எச்சரித்துள்ளது. சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமக்கு முறையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி அலெக்சி நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட அவரது உண்ணாவிரத போராட்டம் இன்று 19 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடின் நவால்னி இன்னும் சில நாட்களில் உயிரிழக்கக்கூடும் என அவரது வைத்தியர்கள் கூறியுள்ளனர். 44 வயதான அலெக்சி நவால்னி கடந்த பெப்ரவரி மாதத்தில் - மோசடி குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கலென விமர்சிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அலெக்சி நவால்னி சிறையில் உயிரிழந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடுமென ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பனவும் கவனம் செலுத்தியுள்ளன. அலெக்ஸி நவால்னி, சிறையில் உயிரிழப்பதற்கு இடமளிக்கப்படாதென ரஷ்யாவுக்கான பிரித்தானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.