தலைவர் பதவியிலிருந்து ராவுல் கெஸ்ட்ரோ இராஜினாமா

கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராவுல் கெஸ்ட்ரோ இராஜினாமா

by Bella Dalima 17-04-2021 | 3:33 PM
Colombo (News 1st) கியூப கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராவுல் கெஸ்ட்ரோ இராஜினாமா செய்துள்ளார். இதனூடாக ஆறு தசாப்தமாக இருந்து வந்த பரம்பரை அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது. 89 வயதான ராவுல் கெஸ்ட்ரோ, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தினரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், தமது தோழமைகளின் வலிமை மற்றும் முன்மாதிரியான தலைமைத்துவம் என்பன தொடர்பில் தாம் தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கட்சி பிரதிநிதிகளிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, 1959 ஆம் ஆண்டு புரட்சியின் பின்னர் ஆரம்பமான ராவுல் கெஸ்ட்ரோ மற்றும் அவரது சகோதரர் ஃபிடல் கெஸ்ட்ரோவின் தலைமைத்துவ ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. கியூபாவில் ஆட்சிப்பீடம் ஏறிய பின்னரும் ஒரு கட்சி ஆட்சி முறையை நிலைநாட்டியவராக ராவுல் கெஸ்ட்ரோ காணப்பட்டார். கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில், கியூபா - அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதில் ராவுல் கெஸ்ட்ரோ முன்நின்று செயற்பட்டார். அத்துடன், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கியூபாவிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமும் அமையப்பெற்றது. எவ்வாறாயினும், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் கியூபா மீதான தடைகள் மீள அமுல்படுத்தப்பட்டதையடுத்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், ட்ரம்பினால் விதிக்கப்பட்ட சில தடைகளை தளர்த்த எதிர்பார்த்துள்ளதுடன், அமெரிக்காவுடனான கௌரவமிக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக ராவுல் கெஸ்ட்ரோ கூறியுள்ளார்.