நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம்

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம்

by Bella Dalima 17-04-2021 | 3:02 PM
Colombo (News 1st) மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (17) காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (16) காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுமென குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக் என இந்திய பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். நடிகர் விவேக் நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். அவர் நடித்த 'பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டான திரைப்படங்களாகும். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் வல்லவர், ‘கலைவாணர் N.S.கிருஷ்ணன். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் இலஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களை பெருமளவில் கடைப்பிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக் கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார். திரைப்படத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது. ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக கோலோச்சியவர் விவேக். இவர் 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன் ஆகும். தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்த சின்னக்கலைவாணர், பிறகு அதே ஊரிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் B.Com பட்டம் பெற்றார். அதே துறையில், M.Com முதுகலைப் பட்டமும் பெற்றார். 1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் கால்பதித்த விவேக், அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி A.P.J. அப்துல் கலாம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட விவேக், அவரது கொள்கைகளை பின்பற்றி தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நாட்டுவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வந்தார். இதுவரை 33 இலட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை அவர் நாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.