நடிகர் விவேக்கின் உடல் பொலிஸ் மரியாதையுடன் தகனம்

நடிகர் விவேக்கின் உடல் பொலிஸ் மரியாதையுடன் தகனம்

நடிகர் விவேக்கின் உடல் பொலிஸ் மரியாதையுடன் தகனம்

எழுத்தாளர் Bella Dalima

17 Apr, 2021 | 6:47 pm

Colombo (News 1st) சுமார் 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிப்போடு சிந்தனைகளையும் விதைத்த நகைச்சுவை நடிகர் காலஞ்சென்ற விவேக்கின் பூதவுடல் இன்று மாலை மேட்டுக்குப்பம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி தனது 59 ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார்.

சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல்வாதிகளும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இறுதி ஊர்வலத்தில் மரக்கன்றுகளை ஏந்திச் சென்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியமை பலரையும் நெகிழச் செய்தது.

நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையைக் கௌரவிக்கும் வகையில் அவரது உடல் பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது அவருக்காக 78 மரியாதை வேட்டுக்களும் தீரக்கப்பட்டன.

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி பிறந்த விவேக், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

பத்மஶ்ரீ விருது, தமிழக அரசின் கலைவாணர் விருது, தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, Filmfare விருது என பல விருதுகளும் அவரைத் தேடி வரத் தவறவில்லை.

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விவேக் சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் கோலோச்சினார்.

வெறுமனே சிரிப்பிற்கான நகைச்சுவை மாத்திரமன்றி, பொதுநலன் கருதிய ஆழமான கருத்துக்களையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

விவேகானந்தன் எனும் இயற்பெயருடைய விவேக், சுவாமி விவேகானந்தர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் சிந்தனையின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பெயரில் ‘க்ரீன் கலாம்’ எனும் மர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்தார்.

அப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று ஒரு கோடி மரம் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை விவேக்கை சாரும்.

இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கு விவேக் முன்நின்றதுடன், அவரைப் பின்பற்றி இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்