பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான இருவரில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்

by Staff Writer 16-04-2021 | 7:31 PM
Colombo (News 1st) யாழ் - பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு வயிற்றில் துப்பாக்கிச்சூட்டு காயமுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன், காலில் துப்பாக்கிச்சூட்டு காயமேற்பட்ட மற்றைய நபருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பருத்தித்துறையில் வீதித் தடையை மீறி பயணித்த கெப் வாகனம் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை குறித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கட்டளையை மீறி பயணித்த கெப் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். பருத்தித்துறையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வீதித் தடை போடப்பட்டுள்ளது. வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கட்டளையிட்ட போதிலும், குறித்த கெப் வாகனம் நிறுத்தாமல் பயணித்துள்ளது. முதலாவது வீதித்தடையில் பொலிஸ் அதிகாரிகளின் கட்டளைகளுக்கு செவி சாய்க்காமல் வாகனம் தொடர்ந்தும் பயணித்துள்ளது. இருப்பினும், இரண்டாவது வீதித் தடையில் கடமையில் இருந்த அதிகாரிகளை குறித்த கெப் வாகனம் மோதிச் செல்வதற்கு முயற்சித்தபோதே பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் 23 மற்றும் 26 வயதான இளைஞர்கள் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த கெப் வாகனம் துன்னாலை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்