சிகாகோவில் 13 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

சிகாகோவில் 13 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை

by Bella Dalima 16-04-2021 | 5:09 PM
Colombo (News 1st) அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிறுவன் சுட்டுக்கொல்லப்படும் காணொளியை அமெரிக்க பொலிஸார் சம்பவம் நடந்த இரண்டு வாரங்களின் பின்னர் வௌியிட்டுள்ளனர். அந்த காணொளியில் காரில் இருந்து இறங்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆடம் டோலிடோ (Adam Toledo) என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்லி துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. குண்டுக்காயம் பட்ட சிறுவன் சுருண்டு வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பொலிஸ் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கெமரா ஊடாக குறித்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் ஆயுதம் வைத்திருந்ததாகவும் ரூபன்ரோமன் என்பவருடன் தப்பி ஓடியதாகவும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கியை மீட்டதாகவும் சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆடம் டோலிடோ சுடப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அருகில் இருந்த வேலியின் பின்னால் துப்பாக்கியை வீசியதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சிறுவன் சுட்டுக் கொல்லப்படும் காணொளி வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு கறுப்பின வாலிபர் ஜார்ஜ் ஃப்ளொய்ட் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் உலகெங்கும் எதிர்ப்பலைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.