இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

by Staff Writer 16-04-2021 | 4:30 PM
Colombo (News 1st) வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு 3 ஆம் கண்டம் வயல் வெளியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குமுழமுனை மேற்கு, குமுழமுனை கிழக்கு, வற்றாப்பளை பகுதிகளைச் சேர்ந்த 36, 30 மற்றும் 42 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார், சட்டவைத்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜாவும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார். இதனிடையே, மட்டக்களப்பு வெல்லாவெளி - மாலையர்கட்டு பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 32 வயதான விவசாயி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐவரில் நால்வர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். வயல்வௌியில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று மாலை இவர்கள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகினர். 4 ஆண்களும் பெண்ணொருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியிருந்தனர். சிகிச்சைகளுக்காக மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இவர்களில் நான்கு ஆண்களும் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதுடன், மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.