ஜனாதிபதி தொலைபேசியில் அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு

ஜனாதிபதி தொலைபேசியில் அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

16 Apr, 2021 | 7:54 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச மற்றும் முருதெட்டுவே ஆனந்த தேரர் ஆகியோர் நேற்று (15) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இன்று மீண்டும் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, தான் முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பில் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகக் கூறினார்.

ஜனாதிபதியின் மொழியாடல் மிகவும் கீழ்த்தரமாக இருந்ததாகவும் அரச தலைவர் ஒருவருக்கு பொருந்தாத மிகவும் துவேசமான வைராக்கியம் மிகுந்த கோபாவேசத்துடன், நடுங்கிக்கொண்டு மிகவும் கீழ்த்தரமாக பேசியதாகவும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

விருப்பமின்றியேனும் அவரது மொழி நடையிலேயே பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பிழையான புரிதலுடன் சில விடயங்கள் தொடர்பில் பேசியதாகக் கூறிய விஜயதாச ராஜபக்ச, எப்போதும் பசில் ராஜபக்ஸ ஒரு ஊழல்வாதி என பகிரங்கமாக தன்னால் கூற முடியும் என்றார்.

தனது பிள்ளைகள் தொடர்பில் கருத்துக்கூறியமைக்காக ஜனாதிபதி கடிந்துகொண்டதாக விஜயதாச ராஜபக்ச கூறினார்.

எனினும், ஜனாதிபதியின் பிள்ளைகள் வௌிநாட்டில் பாதுகாப்பாக வாழ்கின்றனர். கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் உள்ள பிள்ளைகள் வாழ நாடில்லாமல் போகும் என தாம் கூறியதாக ஜனாதிபதியிடம் விஜயதாச தௌிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஒருவர் அவ்வாறு அச்சுறுத்தும் போது எமக்கு உயிர்ப் பயம் ஏற்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கும் அறிவித்தோம். எழுத்து மூலமாகவும் அறிவிப்போம்

என விஜயதாச தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்