உணவுப் பொருட்களில் தீங்கிழைக்கும் பதார்த்தங்கள்: விரிவாக விசாரிக்குமாறு COPA சுகாதார அமைச்சிற்கு அறிவுறுத்தல்

உணவுப் பொருட்களில் தீங்கிழைக்கும் பதார்த்தங்கள்: விரிவாக விசாரிக்குமாறு COPA சுகாதார அமைச்சிற்கு அறிவுறுத்தல்

உணவுப் பொருட்களில் தீங்கிழைக்கும் பதார்த்தங்கள்: விரிவாக விசாரிக்குமாறு COPA சுகாதார அமைச்சிற்கு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

16 Apr, 2021 | 6:05 pm

Colombo (News 1st) உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

COPA எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களில் உள்ளடங்கியுள்ள தீங்கிழைக்கும் பதார்த்தங்கள் குறித்து விசாரணை செய்வதற்கான அதிகாரம் சுகாதார அமைச்சுக்கே இருப்பதாகவும், இதற்கமைய உணவுப் பொருட்களில் காணப்படும் தீங்கிழைக்கும் பதார்த்தங்கள் குறித்து விரிவான விசாரணைகளை நடத்துமாறும் COPA குழு அறிவுறுத்தியுள்ளது.

பொருட்களை பரிசோதனை செய்வதற்கான ஆய்வுக்கூட வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டம் விரைவில் திருத்தப்பட வேண்டுமெனவும் COPA குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பொருட்களை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடங்களுக்கிடையில் உரிய தொடர்பாடல் இன்மையால் நிலைமை தற்பொழுது மோசமடைந்துள்ளதாக COPA குழுவின் முன்னாள் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று இன்மையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் 2017 / 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுகாதார அமைச்சு தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை, சுகாதார அமைச்சின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் COPA கூடிய போதே இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனிடையே, இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்களில் மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குமுறையொன்றை உருவாக்குவது முக்கியமானதெனவும் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக COPA குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்