ஆயுத வியாபார வழக்கில் கனேமுல்ல சஞ்சீவ விடுதலை 

ஆயுத வியாபார வழக்கில் கனேமுல்ல சஞ்சீவ விடுதலை 

by Staff Writer 12-04-2021 | 2:10 PM
Colombo (News 1st) பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான 'கனேமுல்ல சஞ்சீவ' எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உள்ளிட்ட 11 சந்தேகநபர்களும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. LTTE அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், T56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த தீர்ப்பை அறிவித்தார். வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட LTTE முன்னாள் உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கனேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை கைது செய்திருந்தனர். சந்தேகநபர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலம் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.