கடலில் மிதந்த போத்தல் திரவத்தை அருந்தி உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

by Staff Writer 11-04-2021 | 8:28 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்தலில் காணப்பட்ட திரவமொன்றை அருந்தி உயிரிழந்த ஒருவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்தவருக்கு கொரோனா பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதுடன் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் இன்று (11) காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே கடந்த வௌ்ளிக்கிழமை கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தியதில் உயிரிழந்துள்ளார். இந்த திரவத்தை அப்பகுதியை சேர்ந்த மேலும் பலர் கடந்த வௌ்ளிக்கிழமை அருந்தியுள்ளனர். திரவத்தை அருந்தியவர்களில் 8 பேரிடம் நேற்று (10) வாக்குமூலம் பெற்றிருந்ததாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்தியதாகவும் ஆனால் தமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடற்பாகங்கள் மற்றும் போத்தலில் இருந்த திரவ மாதிரி என்பன தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.