இமாட் சுபேரி தொடர்பான வௌிக்கொணர்வு

by Staff Writer 11-04-2021 | 9:42 PM
Colombo (News 1st) இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு பணம் செலுத்தி சேவை பெறப்பட்ட இமாட் சுபேரி என்பவர் அமெரிக்காவின் CIA உளவு நிறுவனத்தின் முகவர் என தெரியவந்துள்ளதாக அமெரிக்க பத்திரிகையான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (11)  அம்பலப்படுத்தியது. யார் இந்த இமாட் சுபேரி? 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி, அமெரிக்காவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக இவரை தெரிவு செய்தது. இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்காக இமாட் சுபேரி எவ்வித அனுகூலமும் இன்றி பங்களிப்பு வழங்கினாரா? இல்லை. இந்த செயற்பாட்டிற்காக 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி அவருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டொலரைச் செலுத்தியுள்ளது. அதாவது, தற்போதைய நாணய மாற்று விகிதத்திற்கு அமைய 131 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும். இமாட் சுபேரிக்கு அமெரிக்காவில் தண்டனை விதிக்கப்பட்டது எதற்காக? தமது இராஜதந்திர தொடர்புகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் முறையற்ற நிதிப்பயன்பாடு ஆகிய குற்றச்சாட்டுகளில், இமாட் சுபேரி கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டார். அந்த குற்றத்திற்காக அவருக்கு 12 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கை பாராளுமன்றம் அல்லது அமைச்சரவையின் அனுமதியின்றி 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் நற்பெயரை அமெரிக்காவில் மேம்படுத்துவதற்காக, சுபேரிக்கு இலங்கை மக்களின் பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இமாட் சுபேரி CIA உளவு நிறுவனத்தின் முகவராக 10 வருடங்களுக்கும் அதிக காலம் செயற்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் பழைமையானதும் பிரபல்யமானதுமான வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. CIA முகவருக்கு எமது நாட்டு மக்களின் பணத்தை வழங்கியது யார்? தற்போதைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் 2014ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டார். சுபேரி, இந்த டீலுடன் மாத்திரமா தொடர்புபட்டார்? இல்லை. அந்தத் தகவலுக்கு அமைய CIA முகவர் இமாட் சுபேரியை வழிநடத்திய ஒருவர், சுபேரி மூலம் நவீன கடற்பாதுகாப்பு மேற்பார்வை கட்டமைப்பொன்றை இலங்கையில் ஸ்தாபிக்கும் நிலைக்கு அரசாங்கத்தை தூண்டுதல் செய்துள்ளார். சீனாவின் நீர்மூழ்கி தாக்குதல் தொடர்பில், அமெரிக்கா அச்சத்துடன் செயற்பட்ட பின்புலத்தில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
இந்த கொடுக்கல் வாங்கலுக்காக அமைச்சரவையின் அங்கீகாரமோ, இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதியோ பெறப்படவில்லை. அஜித் நிவாட் கப்ரால் தான்தோன்றித்தனமாக வௌிப்படைத் தன்மை இன்றி பொதுமக்களின் பணத்தை செலவு செய்துள்ளார். இது நான் 2014ஆம் ஆண்டில் எழுதிய கடிதம். இது அன்று இடம்பெற்ற விடயம். இன்று அமெரிக்காவினால் கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்காவில் இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் நிதிதூய்தாக்கல் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கு, அமெரிக்காவிலிருந்து வந்த கோட்டாபய ராஜபக்ஸவிடம் நாம் ஒரு விடயத்தை வினவுகின்றோம். எமது நாட்டின் பொதுமக்களின் பணம் திருடப்பட்டுள்ளமை இன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திருட்டுடன் தொடர்புடைய அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ராலுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? இந்த விடயம் இன்று உலகிற்கே தெரியவந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் இவற்றை கண்டும் காணாதது போல் இருந்து எம்மை தோற்கடித்தனர். நிவாட் கப்ரால் தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்குச் சென்றார். இது குறித்து நாம் வழக்குத் தாக்கல் செய்தால், ஆணைக்குழுவொன்றை நியமித்து நிவாட் கப்ராலையும் விடுவித்து விடுதலை செய்வார்களோ என்ற அச்சம் எமக்குள்ளது
என டப் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியது. பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி, CIA முகவருக்கு தான்தோன்றித் தனமாக மக்களின் பணத்தை வழங்கியவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அல்லவா?