by Bella Dalima 09-04-2021 | 7:33 PM
Colombo (News 1st) யாழ். மாநகர மேயரின் கைதை கண்டிப்பதாகவும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், யாழ். மாநகர மேயர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் கைது சம்பவம் தமிழ் மக்களை தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்க அரசு விரும்புவதை தௌிவுபடுத்துவதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
ஏனைய மாநகர சபைகள் போல யாழ். மாநகர சபையும் தமது அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முனைகின்ற போது, தடைகள் விதிக்கப்படுவதாகவும் சுமந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை மோசமான இனவாதம் மற்றும் பாசிசத்தின் அடிப்படையிலானது என உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
விஸ்வலிங்கம் மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மணிவண்ணன் கைது தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை உட்பட இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, யாழ் மேயர் கைது செய்யப்பட்டமை கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அனைவரதும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாத்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கான சிறந்த வழி வலுவான சட்டவாட்சி என அமெரிக்க தூதுவர் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.