சீனாவின் Sinopharm தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சீனாவின் Sinopharm தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

சீனாவின் Sinopharm தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2021 | 5:54 pm

Colombo (News 1st) சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினூடாக இந்த மனு உயர் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சீனாவின் Sinopharm தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக முறையான அனுமதி வழங்கப்படும் வரை, அந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நோயாளர்களின் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அதன் தலைவர், செயலாளர் ஆகியோர் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினூடாக இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி, மருந்து உற்பத்தி, பகிர்ந்தளித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட 24 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சீனாவின் தடுப்பூசி நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர், அது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் உறுப்பினர்களை தன்னிச்சையாக நீக்கும் செயற்பாடு பொது மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், அது அரசியல் அமைப்பை மீறும் செயல் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, குறித்த தடுப்பூசி தொடர்பில் ஆராய நியமித்த நிபுணர் குழுவின் விபரங்களையும் தடுப்பூசி தொடர்பில் கோரிய விடயங்களையும் வெளிப்படுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் உள்ளிட்டவை உறுதி செய்யப்படும் வரை அதனை இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்படல் வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று தீர்ப்பு வழங்கும் வரை சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்