மூவருக்கு டென்மார்க்கில் பரவும் புது வகை தொற்று

டென்மார்க்கில் பரவும் புது வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பில் அடையாளம்

by Staff Writer 08-04-2021 | 6:31 PM
Colombo (News 1st) டென்மார்க்கில் பரவும் புது வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமது ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் 129 பேருக்கு இன்று COVID தொற்று உறுதி செய்யப்பட்டதாக, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் தற்போது வரை 992 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டார். இந்நிலையில், நகரப் பகுதியிலுள்ள 70 கடைத் தொகுதிகளைத் தவிர ஏனைய கடைகளைத் திறப்பதற்கான அனுமதியை சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், யாழ். நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பஜார் வீதி, கஸ்தூரியார் வீதியில் ஒரு பகுதி, மின்சார நிலைய வீதி, வைத்தியசாலை வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.