திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பிணையில் விடுவிப்பு

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கைதாகி பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 08-04-2021 | 2:31 PM
Colombo (News 1st) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட திருமதி உலக அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் மாடல் அழகி சூலா பத்மேந்திரா ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆஜராகுமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருமதி அழகி இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, திருமதி உலக அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இம்முறை திருமதி இலங்கை அழகியாக தெரிவான புஷ்பிகா டி சில்வா என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. திருமதி அழகியாக தாம் தெரிவாகி மகுடம் சூட்டப்பட்ட போது, அதனை பறித்தெடுத்து மற்றுமொருவருக்கு சூட்டியதாக முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார். தனக்கு சூட்டப்பட்ட கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பலாத்காரமான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் புஷ்பிகா டி சில்வா தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கருவாத்தோட்டம் பொலிஸார்,  திருமதி உலக அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகியோரை கைது செய்தனர்.