உரிய தரத்துடனான Palm Stearin எண்ணெயை பயன்படுத்த தடையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

உரிய தரத்துடனான Palm Stearin எண்ணெயை பயன்படுத்த தடையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

உரிய தரத்துடனான Palm Stearin எண்ணெயை பயன்படுத்த தடையில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

எழுத்தாளர் Staff Writer

08 Apr, 2021 | 8:04 pm

Colombo (News 1st) பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டாலும் அங்கீகரிக்கப்பட்ட தரத்துடனான Palm Stearin என்றழைக்கப்படும் எண்ணெயை உப உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்துவதில் எவ்வித தடையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினூடாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

நுகர்விற்கும் பொது சுகாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உணவு தொடர்பான விசேட நிபுணர்கள் பரிந்துரைத்தமையாலேயே உடன் அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி தடை விதித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அங்கீகரிக்கப்பட்ட தரத்துடனான பாம் எண்ணெயை பிஸ்கட்ஸ், தின்பண்டங்கள், பான் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் உற்பத்திகளுக்கு பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முள்ளுத்தேங்காய் உற்பத்தியால் நீர் வளங்கள் அற்றுப்போவதுடன், மண் வளம் பாதிக்கின்றமை உள்ளிட்ட நீண்டகால சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் 6 மாதங்களுக்கு முன்னர் முள்ளுத்தேங்காய் உற்பத்தியை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தற்போது பயிரிடப்பட்டுள்ள முள்ளுத்தேங்காய் மரக் கன்றுகளை வருடமொன்றுக்கு 10 வீதம் என்ற அடிப்படையில் அகற்றி, குறித்த காணிகளில் இறப்பர் மற்றும் சூழலுக்கு ஏற்புடைய வேறு பயிர்செய்கைகளை திட்டமிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்