டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: வடகொரியா அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: வடகொரியா அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை: வடகொரியா அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Apr, 2021 | 3:53 pm

Colombo (News 1st) கொரோனா அச்சம் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி, வருகிற ஜூலை 23 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

டோக்கியோ உட்பட ஜப்பானின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனால் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வட கொரியா அறிவித்துள்ளது‌.

தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.​

கடந்த ஆண்டு உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியது முதலே வட கொரியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்திருப்பதாக வட கொரியா குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் இந்த அறிவிப்பு தென் கொரியாவிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

ஏனெனில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் இரு கொரிய நாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலை உருவாக்குவதற்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலமாகவே இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகைமை விலகி இணக்கமான உறவு ஏற்பட்டது.

மேலும், இது வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புகளுக்கும் வழிவகுத்தது.

இந்த சந்திப்புகள் மேம்பட்ட உறவுகளுக்கான நம்பிக்கைகளை ஏற்படுத்தின. ஆனால் எதுவும் முறையாக செயற்படுத்தப்படாததால் நிலைமை மீண்டும் மோசமடைந்தது.

வட கொரியாவுடனான தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உறவுகள் தொடர்ந்து பதற்றமான சூழலிலேயே உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்