இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவில் குளறுபடி

தமிழக சட்டமன்றத் தேர்தல்: இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவில் குளறுபடி

by Staff Writer 06-04-2021 | 9:00 PM
Colombo (News 1st) தமிழகத்தின் 16 ஆவது சட்டமன்றத் தேர்தல் இன்று (06) நடைபெற்றது. இதனைத் தவிர இந்தியாவின் மேலும் மூன்று மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்றது. 234 தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. திருச்சி மேற்கு தொகுதியில் 3 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குப்பதிவு தாமதமான சம்பவம் பதிவாகியுள்ளது. திருச்சி மேற்கு தொகுதியில் பீம் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறுக்குள்ளானதால் தாமதம் ஏற்பட்டது. காலை 9.30 அளவில் இயந்திரம் கோளாறுக்குள்ளானதுடன், இதனால் வாக்காளர்கள் 3 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்களிக்க முடியாமல் ஓரிடத்திலேயே நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே, எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் அது பா.ஜ.க-வின் தாமரை சின்னத்திற்கே வீழ்வதாக வாக்காளர்கள் தெரிவித்ததால், விருதுநகர் தொகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் வாக்காளர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், வாக்களிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இடம்பெற்றதுடன், கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது.