by Staff Writer 06-04-2021 | 9:13 PM
Colombo (News 1st) குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை நேற்று (05) இரவு உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனமுற்ற அவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அவர் திடீர் சுகயீனமுற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதன்போது, சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன்போது அவர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்தியாவை சேர்ந்த 45 வயதான திலீப் குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணைகளை வாரியப்பொல மாவட்ட நீதவான் சஞ்ஜீவ ரம்மியகுமார இன்று மதியம் மேற்கொண்டார்.
சட்ட வைத்திய பரிசோதனை மற்றும் PCR பரிசோதனைக்காக சடலத்தை குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இரட்டை பிரஜாவுரிமையைக் கொண்டவர் எனவும், சுமார் 15 வருடங்கள் அவர் நாட்டில் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் தோமஸ் என்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டவுடன், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அவர் ஒரு மனநோயாளர் என்று அறிவித்தது.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.