இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுமாறு பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல்

இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுமாறு பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல்

இலங்கை கடற்பரப்பினுள் நுழையும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுமாறு பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

06 Apr, 2021 | 7:54 pm

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார்.

காலியில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார். அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்குவதாக இருந்தால், நாட்டில் கடற்றொழில் அமைச்சர் ஒருவர் இருப்பதில் பலன் உள்ளதா என ரத்ன கமகே கேள்வி எழுப்பினார்.

வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்பெற வேண்டும் எனவும் ரத்ன கமகே வலியுறுத்தினார்.

இந்திய மீனவர்களுக்கு தமது கடற்பரப்பிற்கு அப்பால் சென்று இலங்கையின் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்குரிய அனுமதியைப் பெற்றுத் தருவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களின் போது உறுதியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது கடல் எல்லைக்குள் அவர்களின் படகுகள் பிரவேசிக்கும் போது அந்தப் படகுகளை அரசுடைமையாக்குவதற்கும் அவர்களுக்கு அபராதம் அறவிடவும் எமது நாட்டிற்கு அதிகாரமுள்ளது. சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது என்ன நடைபெறுகிறது? அவற்றை அரசுடைமையாக்கி பின்னர் விடுவிக்கின்றனர். பிறந்த தினங்களில் அல்லது சுத்திர தினங்களில் விடுவிக்கின்றனர். வடக்கில் மீனவர் சங்கங்களிடம் மீனவர்களுக்கு வழங்குவதங்கு படகுகள் இல்லை. முடியாவிட்டால் அந்த அனைத்து படகுகளையும் அழித்துவிடுங்கள் அல்லது மீன்கள் இனப்பெருக்க நிலையங்களில் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக படகுகளை மூழ்கடித்து விட முடியும் அல்லவா? எனவே அரசாங்கம் விரைவில் அது தொடர்பிலான நிலைப்பாட்டை வௌியிட வேண்டும்

என ரத்ன கமகே கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கை மீனவர்கள் விரைவில் மீட்கப்படுவார்களென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளிநாடுகளின் எல்லைப் பாதுகாப்பு தரப்பினரிடம் சிக்கிக் கொள்வார்களாயின், அவர்களை மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மியன்மார் தூதரக அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மியன்மார் கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்