இராயப்பு ஜோசப் ஆண்டகை திருவுடல் இன்று நல்லடக்கம்

பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம் 

by Staff Writer 05-04-2021 | 2:09 PM
Colombo (News 1st) மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று பிற்பகல் 2 மணி வரை இறுதி அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணியளவில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் அனைத்திலங்கை ஆயர்களின் கூட்டு திருப்பலி இடம்பெற்று கத்தோலிக்க திருச்சபையின் மரபிற்கு அமைய பேராலயத்தினுள் ஆயரின் திருவுடலை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை தனது 81 ஆவது வயதில் கடந்த முதலாம் திகதி நித்திய இளைப்பாறினார். இதனிடையே மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் இன்று கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இன்று காலை அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மதத் தலைவர்களும் அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதன்போது ஆயரின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனிடையே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பிலும் இன்று காலை அஞ்சலி நிகழ்வொன்று நடத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

ஏனைய செய்திகள்