கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை விசாரணைகள் தடையின்றித் தொடரும்: பிரதமர் வாக்குறுதி

by Staff Writer 03-04-2021 | 7:25 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களின் பொறுமை அளப்பரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராண்டுகளுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தமையை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், அந்த கொடிய தாக்குதலை அன்று போன்றே இன்றும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். தாக்குதலில் உயிரிழந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ சமூகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார். கிறிஸ்தவ சமூகத்தினர் எதிர்பார்ப்பது போன்று, தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை விசாரணைகள் தடையின்றித் தொடரும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.