உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

by Staff Writer 03-04-2021 | 3:56 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், முப்படையினர் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். மட்டக்களப்பு, சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலுள்ள தேவாலயங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேவாலயங்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக 12,040 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த பாதுகாப்பு செயற்றிட்டம் தொடர்பில் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.