தேங்காய் எண்ணெய் தேவையில் 70%  இறக்குமதியாகின்றது

தேங்காய் எண்ணெய் தேவையில் 30% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தியாகிறது: தெங்கு அபிவிருத்தி அதிகார சபை

by Staff Writer 02-04-2021 | 4:52 PM
Colombo (News 1st) உள்ளூர் தேங்காய் எண்ணெய் தேவையில் 30% மாத்திரமே நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் வருடாந்தம் 1,80,000 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் தேவை நிலவுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக, நாட்டில் தேங்காய் எண்ணெய் தேவையில் 70 வீதத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, உள்ளூர் தேங்காய் எண்ணெய் தயாரிப்பினை ஊக்குவிக்கும் நோக்கில், உரிய தேங்காய் வகைகளை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிசிங்க கூறினார்.