காத்தான்குடியில் இளைஞர்கள் இருவர் கைது

அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்தமைக்காக காத்தான்குடியில் இளைஞர்கள் இருவர் கைது

by Staff Writer 02-04-2021 | 5:22 PM
Colombo (News 1st) அடிப்படைவாத கருத்துக்களை இணையதளத்தினூடாக பகிர்ந்தமை தொடர்பில் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். 28 மற்றும் 29 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டாரிலிருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இவ்விருவரும் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 'வன் உம்மா' எனும் வாட்ஸப் செயலி ஊடாக பல்வேறுப்பட்ட தகவல்களை பகிர்ந்தமை, பல்வேறு தரப்பினரை வஹாப்வாதம் மற்றும் அடிப்படைவாதத்தில் ஈடுபடுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைவாழ் முஸ்லிம் மக்களின் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட அடிப்படைவாத கருத்துக்களை சந்தேகநபர்கள் பகிர்ந்துள்ளனர். சஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்ட போதனைகள் மற்றும் அடிப்படைவாதங்களை பரப்பியமைக்கான காணொளிகள், நிழற்படங்கள் போன்வற்றை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் இணையதளத்தில் சந்தேகநபர்கள் பகிர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். ISIS தீவிரவாதிகளின் தகவல்களை பகிர்ந்தமை தொடர்பில் கட்டாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், ஆறு பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட 6 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.