by Staff Writer 01-04-2021 | 3:52 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது, அரசுக்கு சொந்தமான 36.98 பில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 08 பிரதிவாதிகளுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு அமைய பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் குழாமின் தலைவரான நீதிபதி தமித் தொடவத்த மற்றும் நீதிபதி மொஹமட் இசடீன் ஆகியோர் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க தீர்மானித்த போதிலும், நீதிபதி மஞ்சுள திலகரத்ன பிணை மனுவை நிராகரித்துள்ளார்.
மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை தீர்மானத்திற்கு அமைய, தலா 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதிவாதிகளுக்கும் தனித்தனியாக சரீர பிணையாளிகளை அறிவித்த நீதிபதிகள் குழாம், சரீர பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் எனவும், மற்றையவர் உறவினர் அல்லாதவராக இருக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளனர்.
இந்த கட்டளையை உறுதி செய்வதற்கான ஆவணங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் அல்லது விசாரணைகளை அச்சுறுத்தும் வகையில் ஏதேனும் விடயங்கள் பதிவானால் பிணை உத்தரவு இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் பிணை இரத்து செய்யப்பட்டு, வழக்கு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை விளக்கமறியலில் இருக்க வேண்டி ஏற்படும் என நீதிபதிகள் குழாமினர் நிபந்தனை விதித்துள்ளனர்.
மேலும் வழக்கு விசாரணை நிறைவு பெறும் வரை பிரதிவாதிகள் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரதிவாதிகளின் வௌிநாட்டு கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.