தேங்காய் எண்ணெய் பவுசர்கள் இறக்குமதியாளர்களின் களஞ்சியங்களுக்கு விடுவிக்கப்பட்டது ஏன்?

by Staff Writer 01-04-2021 | 8:05 PM
Colombo (News 1st) புற்றுநோய் காரணி அடங்கிய தேங்காய் எண்ணெய் தொடர்பான பிரச்சினை தற்சமயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தர நிர்ணய சபை கூறும் வகையில், நடத்தப்பட்ட இரண்டு பரிசோதனைகளில் மூன்று நிறுவனங்கள் இறக்குமதி செய்த 13 கொள்கலன்களில் புற்றுநோய் காரணி அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதற்கமையவே, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், இந்த தேங்காய் எண்ணெய் தொகை, சுங்கத்தின் பொறுப்பில் சுங்கத்தின் முனையத்திலோ அல்லது சுங்கத்துடன் தொடர்புடைய களஞ்சியத்திலோ அன்றி, அவற்றைக் கொண்டு வந்த நிறுவனங்களின் களஞ்சியங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. போதிய களஞ்சியசாலை வசதியின்மையால், அவை இறக்குமதியாளர்களின் களஞ்சியங்களுக்கு விடுவிக்கப்பட்டன என்பதே சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தௌிவுபடுத்தலாகும். இந்த நிலையிலேயே, புற்றுநோய் காரணியுள்ள தேங்காய் எண்ணெய் என சந்தேகிக்கப்படும் இரண்டு பவுசர்களை இறக்குமதியாளர் ஒருவரிடமிருந்து தங்கொட்டுவ பொலிஸார் கைப்பற்றினர். மாரவில நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, இந்த இரண்டு பௌசர்களும் கொழும்பு துறைமுகத்தின் சுங்கப் பிரிவு முனையத்திற்கு நேற்று (31) கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் நீதவானின் கடுமையான அதிருப்திக்கு உள்ளானதுடன், உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது. இதனிடையே, புற்றுநோய் காரணி அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.