முறிகள் ஏலத்தில் 10 பில்லியனை பெற்றுக்கொண்ட CBSL

40 பில்லியனை பெற்றுக்கொள்வதற்கான முறிகள் ஏலத்தில் 10 பில்லியனை பெற்றுக்கொண்ட மத்திய வங்கி 

by Staff Writer 31-03-2021 | 10:45 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 202 ரூபாவாக இன்றைய தினம் உயர்ந்தது. இது இலங்கையில் அமெரிக்க டொலருக்கு கிடைத்துள்ள அதிகபட்ச பெறுமதியாகும். இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய பரிமாற்றத்தின் பிரகாரம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202 ரூபா 04 சதமாகும். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம் கடந்த 6 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 9 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, இலங்கை மத்திய வங்கி நேற்று (30) நடத்திய திறைசேரி முறிகள் ஏலத்தின் போது முன்வைக்கப்பட்ட விலை மனுக்களில் 77 வீதமானவை பெற்றுக்கொள்ளப்படவில்லை. ஏலத்தின் போது முன்வைக்கப்பட்டிருந்த வட்டி வீதம் ஓரளவு அதிகரித்திருந்ததையும் காண முடிந்தது. அரசாங்கத்திற்கு தேவையான 40 பில்லியன் ரூபா குறுகிய கால கடனை பெற்றுக்கொள்வதற்காக இந்த முறிகள் ஏலம் நேற்று நடத்தப்பட்டது. இதன்போது, 10 பில்லியன் ரூபாவிற்கு மூன்று மாத முறிகளையும் 15 பில்லியன் ரூபாவிற்கு 6 மாத முறிகளையும் 20 பில்லியனுக்கான ஒராண்டு முறிகளையும் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் விடுத்திருந்தது. இதன்​போது, ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் முறிகளுக்காக 20 பில்லியன் ரூபா விலை மனு முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதில் எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்வதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆறு மாதத்தில் முதிர்ச்சியடையும் முறிகளுக்காக 16 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட வில மனு முன்வைக்கப்பட்டிருந்தாலும் அதில் 7 பில்லியன் ரூபா மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மூன்று மாத காலத்தில் முதிர்ச்சியடையும் முறிகளுக்காக 10 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட விலை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் அதில் 2.9 பில்லியன் ரூபாவை மாத்திரமே மத்திய வங்கி பெற்றுக்கொண்டிருந்தது. இதேவேளை, தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளுக்கு அமைவாக கடந்த வருடத்தில் மூன்றாம் காலாண்டில் இந்நாட்டில் தொழிலற்றோரின் எண்ணிக்கை 5.8 வீதமாக அதிகரித்துள்ளது. குறித்த காலாண்டில் 15 முதல் 24 வயதிற்குட்பட்ட தொழில் தேடுவோரின் எண்ணிக்கையில் 25.9 வீதமானோர் தொழிலின்றி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தொழில் செய்யும் வயதுடைய 25 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களில் 13 வீதமானோர் தொழிலற்றவர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.