சீனாவின் Sinopharm தடுப்பூசி முதலில் சீன பிரஜைகளுக்கு ஏற்றப்படவுள்ளது; அனுமதி கிடைத்தவுடன் இலங்கையருக்கு வழங்கப்படும்

by Bella Dalima 31-03-2021 | 8:18 PM
Colombo (News 1st) நாட்டிற்கு இன்று கொண்டுவரப்பட்ட சீனாவின் COVID தடுப்பூசியை நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு ஏற்றும் நடவடிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் திட்டம் விசேட குழுவின் கண்காணிப்பிற்கு பின்னர் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன தயாரிப்பான 6 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இன்று முற்பகல் 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. இலங்கைக்கான சீன தூதுவர் சீ.ஜென்ஹொன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய, தடுப்பூசி இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 6 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பான ஆவணங்களில் சீன தூதுவர் சீ.ஜென்ஹொன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த தடுப்பூசித் தொகை இன்று பிற்பகல் சுகாதார அமைச்சின் மத்திய தடுப்பூசி களஞ்சியத் தொகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதேவேளை, ஜெர்மனியில் தயாரிக்கப்படுகின்ற Pfizer-BioNTech தடுப்பூசி 12 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு 100 வீதம் செயற்றிறனுடன் பொருந்தும் என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சில வயது பிரிவினருக்கு Astrazeneca தடுப்பூசியை பயன்படுத்தாதிருப்பதற்கு ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன. குருதி உறைதலால் சிலர் பீடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.