கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் பவுசர்களை சுங்க களஞ்சியத்திற்கு அனுப்பியது ஏன்: மாரவில நீதவான் விளக்கம் கோரல்

by Bella Dalima 31-03-2021 | 9:16 PM
Colombo (News 1st) புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தங்கள் அடங்கியுள்ளதாக சந்தேகத்தின் பேரில் தங்கொட்டுவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் ஏற்றிய இரண்டு பவுசர்களும் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் சுங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டமை இன்று தெரியவந்தது. மாரவில நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் விடயங்களை முன்வைத்த போதே இந்த விடயம் உறுதியானது. தங்கொட்டுவை பொலிஸாரின் பொறுப்பில் இருந்த இரண்டு தேங்காய் எண்ணெய் பவுசர்களும் இன்று காலை பொலிஸ் நிலையத்தில் இருந்து வௌியில் கொண்டுவரப்பட்டு, கொழும்பு துறைமுக சுங்கப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. பவுசரில் காணப்பட்ட தேங்காய் எண்ணெயின் மாதிரி சுங்கப் பிரிவிற்கு உள்ளே இருந்தே பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் பொறுப்பில் இதனை வைத்துக்கொண்டு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்புமாறு மாரவில நீதவான் ரக்கித்த அபேசிங்க உத்தரவிட்டிருந்த பின்புலத்திலேயே இந்த இரண்டு பவுசர்களும் சுங்கத்தின் பொறுப்பில் இருந்தன. இரண்டு பவுசர்களும் எந்தப் பின்புலத்தில் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன என மாரவில நீதவான் ரக்கித்த அபேசிங்க இன்று பொலிஸாரிடம் வினவினார். பொலிஸ் சட்டப் பிரிவின் ஆலோசனைக்கு அமைய, தாம் இரண்டு பவுசர்களையும் சுங்கத்திடம் ஒப்படைத்ததாக தங்கொட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். பொலிஸார் செயற்பட வேண்டியது பொலிஸ் சட்டப்பிரிவின் ஆலோசனைக்கு அமைவாகவா அல்லது நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாகவா என நீதவான் இன்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவியுள்ளார். தங்கொட்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதற்கு பதிலளிக்காத நிலையில், அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மாரவில நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும், சுங்கத்தின் பொறுப்பில் இருக்க வேண்டிய சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய், அதனைக் கொண்டு வந்த நிறுவனங்களின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட தமது தயாரிப்புகள் பலவற்றின் தரம் குறித்து சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக பிரமிட் வில்மார் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது. இந்நாட்டு தர நிர்ணய அதிகாரிகள் நிர்ணயித்துள்ள தேங்காய் எண்ணெயில் இருக்க வேண்டிய Aflatoxin அளவு உட்பட ஏனைய சகல தயாரிப்புகளும் தரத்திற்கு ஏற்றதாக உள்ளதென உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நுகர்வோரின் பாவனைக்கு கிடைக்கும் என அந்த நிறுவனத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச தரத்திற்கு அமைவாக கடும் கண்காணிப்பின் கீழ் தமது தயாரிப்புகளை நுகர்வோருக்கு வழங்குவதாகவும் பிரமிட் வில்மார் நிறுவனம் தெரிவித்துள்ளது.