இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாக சீனா தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு ஒத்துழைப்பதாக சீன ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 31-03-2021 | 7:28 PM
Colombo (News 1st) "ஒரே மண்டலம் ஒரே பாதை" திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதன் ஊடாக இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இணைந்து செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ( Xi Jinping), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (29) இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் சீனாவின் CGTN இணையத்தளம் வௌியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு விமான சேவை, கல்வி மற்றும் ஏனைய துறைகளில் அத்தியாவசியமான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாக சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் அந்த இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் சீனா சட்டபூர்வமான ஆசனத்தை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஜனாதிபதி Xi Jinping தெரிவித்துள்ளார். பூகோள நீதி மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்காக புரிந்துணர்வு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டங்கள் துரிதமாக நிறைவேறுவதைக் காண்பதே தமது நோக்கம் எனவும் சீன ஜனாதிபதி இந்த கலந்துரையாடலின் போது கூறியதாக ஜனாதிபதி செயலகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தது.