Sinopharm தடுப்பூசிகள் நாளை கிடைக்கின்றன; முதற்கட்டமாக இலங்கையில் உள்ள சீன பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானம்

by Staff Writer 30-03-2021 | 3:43 PM
 Colombo (News 1st) சீனாவினால் தயாரிக்கப்படும் Sinopharm கொரோனா தடுப்பூசிகள் நாளை (31) நாட்டிற்கு கிடைக்கவுள்ளன. சீன அரசாங்கத்தின் நன்கொடையாக 6 இலட்சம் தடுப்பூசிகள் நாளை கிடைக்கவுள்ளன. நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசிகளை முதலில் இங்கு வசிக்கும் சீன பிரஜைகளுக்கு ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையில் தொழிலுக்காக வருகை தந்துள்ள 4500 சீன பிரஜைகளுக்கு முதற்கட்ட Sinopharm தடுப்பூசிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். எவ்வாறாயினும், Sinopharm தடுப்பூசியை நாட்டில் பயன்படுத்துவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகளால் இதுவரை சீனாவின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி கிடைத்தவுடன் எஞ்சியுள்ள Sinopharm தடுப்பூசிகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதேவேளை, கொரோனா தடுப்பூசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.