சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

சூயஸ் கால்வாயில் சரக்குக் கப்பல் போக்குவரத்து மீள ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2021 | 4:40 pm

Colombo (News 1st) எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்குக் கப்பல் நேற்று (29) முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு வார காலத்திற்குப் பிறகு அப்பாதையில் சரக்குக் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.

இன்று காலை முதல் சரக்குக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக பயணிக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காத்திருந்த அனைத்து கப்பல்களும் அங்கிருந்து சென்று, கப்பல் போக்குவரத்து முற்றிலும் சீரடைவதற்கு குறைந்தபட்சம் மேலும் ஒரு வார காலம் ஆகும் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

Ever Given என்ற சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயின் குறுக்கே பக்கவாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை சிக்கியது. கடும் காற்று வீசியதன் காரணமாக அந்தக் கப்பல் தரைதட்டி நின்றது. அதனால், கால்வாயின் வழியே கப்பல் போக்குவரத்து கடும் பாதிப்பைச் சந்தித்தது.

கால்வாயின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வரிசைகட்டி நின்றன. தரைதட்டிய கப்பலை 10 இழுவைக் கப்பல்கள் மூலம் இழுக்கும் பணியும், கப்பலடியில் மணலை அகற்றும் பணியும் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஒரு வார கடும் முயற்சிகளுக்குப் பிறகு கப்பல் நேற்று மீண்டும் மிதக்கத் தொடங்கியது. அதன் காரணமாக, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்