யாழில் இருவர் கைது

விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் இருவர் கைது.

by Staff Writer 29-03-2021 | 6:20 PM
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் YouTube channel மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை நடத்திவந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இணையதள வசதிகள் மற்றும் சைபர் குற்றத் தடுப்பு பிரிவினரால் சம்பவம் தொடர்பில் தகவல்கள் திரட்டப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அடிப்படைவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் YouTube channel மற்றும் இணையத்தளத்தில் சந்தேகநபர்களால் தகவல்கள் பகிரப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலீசார் குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அலுவலகம் ஒன்றிலிருந்து குறித்த YouTube channel மற்றும் இணையத்தளம் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்த 35 வயதான பெண்ணொருவரும், 36 வயதான ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அலுவலகத்திலிருந்த கணிணி ஒன்றும், 05 மடிக்கணிணிகள் உள்ளிட்ட இலத்திரணியல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவின் கொழும்பு தலைமையகத்திற்கு சந்தேகநபர்கள் அழைத்துவரப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.